நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, February 23, 2012

கண்ணாடி ஜன்னல்களை எனக்குப் பிடிப்பதில்லை

                      மூடிக் கிடக்கும் கதவு தட்டப்படும் போதெல்லாம் யாரோ  வந்து ஏதோ ஒரு உற்சாகத் தகவல் சொல்லப் போகிறார்கள் என்னும் எண்ணமும், உறங்கிக் கிடக்கும் தொலை பேசி பாடல் பாடி அழைக்கும் போது யாரோ ஒரு முகம் தெரியா உறவு ஒரு சந்தோஷத்தில் ஆழ்த்தும் தகவல் சொல்லும் என்று காத்துக் கிடக்கும் மனமும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.உறைக்குள் உறங்கிக் கிடக்கும் கடிதமொன்றைப் பிரிப்பதில் இருக்கும் அவசரம் அதனுள் இருக்கும் ஒரு முன்பே தெரிந்திராத ஒரு விஷயத்துக்காக......அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும்  அழகாக வண்ணக் காகிதங்களால் சுற்றப் பட்ட பரிசுப் பொருள் பிரிக்கப் படும் படபடப்பு அதனுள் இருக்கும் பரிசுக்காகத்தானே.....இதுவரை சுற்றப் பட்ட வண்ணக் காகிதங்களைத் தாறுமாறாகக் கிழிக்காமல் ஒழுங்காக ஒருமுறை கூடக் கிழித்ததில்லை.
                              மூடிக் கிடக்கும் ஜன்னல்கள் அடக்கி வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் கூட இந்த வகைதான்.மெயில் பாக்ஸ் திறக்கும் போதும் பாஸ் வேர்ட் டைப் பண்ணும் போதும் புது மெயில் கொண்டு வந்து தரும் செய்திகளுக்காக ஏங்கித்தான் கிடந்து போகிறது மனம். மொட்டவிழாத மலர்,மூடி திறக்காத சிப்பி, தளிர்க்காத செடி,முளை விடாத விதைகூட இப்படி வாழ்வின் ஒவ்வொரு படியிலும் ஆச்சர்யங்கள்.
                              கடல் முன்னால் தாகத்தோடு நிற்கும் உணர்வும் கடலுக்குள் எதையோ தேடி ஓடவேண்டும் என்ற எண்ணமும் கூடத் தவிர்க்க முடியாததாகிப் போகிறது. நீள் சாலையில் தன்னந்தனியாக ரப் ரப்பென்று சத்தமெழுப்பியபடி ஓடும் மனம் என் கண்ணில் எனக்கே தெரிகிறது....இது கொஞ்சம் அதிகம்தான்.ஆனால் எனக்கு நடக்கிறதே....
தபால் கார்டுகளும்
கண்ணாடி ஜன்னல்களும்
எனக்குப் பிடிப்பதில்லை
தகவல்களை எனக்கு
முன்கூட்டியே சொல்லிவிடுவதால்...
தெரியாதவைகளுக்கும்
தெரிந்தவைகளுக்குமிடையே
ஒரு சமன்பாட்டைப்
போட்டுக் கொண்டு
இயல்பாக இருக்க
முடிந்தவர்கள்
அசாதரணர்கள்......
நான் பாவம்
சாதாரணமானவளாய்
இருந்துவிட்டுப் போகிறேன்....

தேடல்களும் ஓட்டமும்தான் இயக்கிக் கொண்டிருக்கும் சக்தி.வண்டியோட்டும் போதும் கூட என்னை முந்திச் செல்லும் வண்டிகளும் நான் முந்திச் செல்லும் வண்டிகளும் கூட என் ஓட்டத்துக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுத்துக் கொன்டிருக்கின்றன.......