நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, December 8, 2015

மழையே....நலமில்லை.....நாங்கள்...


கையில் தீப்பந்தம் எடுத்து
நேற்று தொலைந்த ஆறு தேடித் தேடி......
இனி எப்படி மழை வரும் என்பதில் கவலை கொண்டு
திரிந்த காலம் உண்டு......

துண்டு துண்டாகத் தனித் தனித் தீவாகத்
தேங்கிக் கிடந்த ஆற்றுத் தண்ணீருக்குள்
முகம் பார்த்து, வானம் பார்த்து மழைக்காகத்
தவம் கிடந்ததுண்டு......

கன்னம் விழும் ஒற்றைத் துளி மழைக்கு
துள்ளிக் கொண்டு ஆர்ப்பரித்து
கைவிரித்துக் கொண்டாடிக் கொண்டாடி
மழைச் சாரலில் நனைந்ததுண்டு.....

உன்னுடன் குடிக்கும் தேனீர் நேரங்களுக்காக
ஜன்னல் கம்பிகளில் கன்னம் பதித்து
நீ பரப்பும் மண் வாசனைக்காகக் 
காத்துக் கிடந்த காலமும் உண்டு.......

உனக்கான நேசம் கொஞ்சம் கொஞ்சமாக
ஒளிந்து கொண்டது.....
உனக்காக கை விரித்துக் கொண்டாடும் 
குதூகலம் காணாமல் போனது...
மழையும், மழை சார்ந்த நினவுகளும்
மழையும், மழை சார்ந்த கவிதைகளும்
காணாமல் போய் .......உயிரற்றுப் போனது மனம்......
போதும் மழையே ......நிறுத்திக் கொள்...

அடித்துக் கொண்டு போன வெள்ளத்தில் 
உன்மேலிருந்த பிரியமும் காதலும்
போட்டி போட்டுக் கொண்டு அடித்துச் சென்றது....
போதும்.....போதும்....கண்முன்னே நிறகாதே.....
நலமில்லை....நாங்கள்.....

Friday, July 25, 2014

மீண்டும் மழையுடன் நான்!.....


இரவு  கொட்டும் மழையில்
உதிர்ந்திருக்கக் கூடுமோ
என மழை நீரில் கைகளால் அளைந்து தேடிக்
கொண்டிருந்தேன்  நடசத்திரங்களை....

கொஞ்சம் தள்ளி சல்லடை வைத்து
மழைநீரில் நட்சத்திரங்களை  வடிகட்டிக்
கொண்டிருந்தாள் மகள்....

மழை இழுத்துக் கொண்டு வந்த
தற்காலிக நதிகளின் சங்கமத்தில்
திடீரென முளைத்த கால்களுடன்
ஓடும் உதிர் இலை மலர்க் கூட்டத்துடன்
கூட்டமாக நானும் இழுபடுவது தெரியாமலேயே
இழுபட்டுக் கொண்டிருந்தேன்....

எப்போதும் போல் மழை அது பாட்டுக்குப்
பெய்து கொண்டிருந்தது....
இழுபடும் மலர்க்கூட்டம் அது பாட்டுக்கு
இழுபட்டுக் கொண்டிருந்தது....
இழுபட்டுக் கொண்டிருக்கும் நான் மட்டும்
ரொம்ப நாளைக்கு அப்புறமாய் இங்கே
எட்டிப் பார்த்துக் கொண்டு!!.....
மழையுடன் நான்.....!!!


Saturday, June 8, 2013

கதை சொல்லவும்...கேட்கவும்....!!

தேவதைக் கதைகளிலிருந்து
பறக்கும் கம்பளத்தையும்
வைரப் பொக்கிஷப் பேழைகளையும் 
சிறகு முளைத்த குழந்தைகளையும்
பேசும் கிளிகளையும்
சிரிக்கும் தவளைகளையும்
காணாமல் போன செருப்பையும்
பூசணிக்காய் ரதத்தையும்
ஏழு மலைகளையும்
ஏழு கடல்களையும் தாண்டி
ஒளித்து வைத்திருக்கும்
இளவரசனின் உயிரையும்
சுருட்டி எடுத்துக் கொண்டாயிற்று
கதை சொல்ல......

வீடியோ விளையாட்டுகளிலும்
தொலைக் காட்சியிலும்
கணினிக் கொண்டாட்டங்களிலும்
மூழ்கியிருக்கும் குழந்தைகளைத்தான்
மீட்டு எடுக்க முடியவில்லை
கதை கேட்க........ 

Thursday, March 7, 2013

கொஞ்சம் என்னைப் போலவும்.....!


கண்ணாடியில் ஒட்டும் பொட்டுக்களும்
கையில் பேனாக் கிறுக்கல்களுடன்
தொலை பேசி உரையாடல்களுமாய்
என்னைப் போல்....

வண்டியை ஓட்டும் சிரத்தையிலும்
பத்திரப்படுத்தும் காகிதப் பழக்கத்திலும்
அப்பாவைப் போல்...

அடுத்தடுத்து சேனல் மாற்றுவதிலும
நாள் முழுவதும் தலை பின்னுவதிலும்
விடாது பாட்டுக் கேட்கும் குணத்திலும்
அக்காவைப் போல்....

நாட்கள் மரங்கள் உதிர்ந்த இலை
போல உதிர்ந்து கொண்டேயிருக்கின்றன...
குட்டிம்மாவைப் பெரியளாக்கிக் கொண்டே...
பொக்கிஷமாய் வைத்து
விளையாடிய செப்புச் சாமான்களும்
பார்பி பொம்மைகளும்
பரணில் குடியேற்றப்பட்டன....

ஷின்சான் ,டோரெமோன்,
டாம் அண்ட் ஜெர்ரி
அனாதையாக்கப் பட்டார்கள்...

பிறந்த நாளை எதிர்பார்த்து
நாட்களை எண்ணும் வைஷு
எங்கேயோ ஓடி ஒளிந்து கொண்டாள்...

ஓயாமல் மணல் அள்ளிக் கொட்டும்
கடல் அலை போல ஓடி ஓடி
எதையேனும் இழுத்து வந்து
போட்டுக் கொண்டேயிருக்கிறது மனம்.

பொண்ணுங்க இப்படித்தான்
திடீர்னு நமக்குச் சொந்தமில்லாமல்
போய்விடுகிறார்கள் ......

எங்கே பறித்து வைத்தாலும்
மணம் வீசும் மலராகவும்
எங்கேனும் தன் வேரை ஊன்றிக் கொள்ளவும்.
மழை குடித்துக் கொள்ளவும்.
காற்றைச் சுவாசிக்கவும்....
வெயிலை உடுத்திக் கொள்ளவும்....
வைஷுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!