நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, April 4, 2011

எங்க வீட்டில் துளசி மேடம்!

தன்னை நேசிக்க ஆட்களைச் சேகரிக்கும் வித்தை சிலருக்குத்தான் வாய்க்கும். அதில் துளசி மேடம் அவர்களுக்கு முதலிடம். மார்ச் முதல் வாரத்தில் ஒரு பின்னூட்டம் ஜெய்ப்பூர் வரும் ப்ளானிருக்கிறது. உங்களைச் சந்திக்க விருப்பம் என்று. அதற்கப்புறம் மடலிலும் பேசி நாள் முடிவு செய்தவுடன் தெரிவித்து அப்புறம் ஏப்ரல் 2ம் தேதி வந்திறங்கியவுடன் நலம் விசாரித்து ப்ரோக்ராம் பற்றி அறிந்து அப்புறமாய் முக்கியமான பதிவர் சந்திப்பைப் பற்றி எப்போ எங்கே என முடிவும் செய்து கொண்டோம். ஏப்ரல் மூன்றாம் தேதி காலையிலிருந்தே ஒரு பரபரப்பில் எதிர்பார்ப்பில் இருந்தோம்.யார் வர்றாங்க யார் வர்றாங்கன்னு கேட்டு அரித்துக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு கூகிள் பண்ணி துளசி அவர்களின் ஃபோட்டோவைக் காட்டியாச்சு!
                    
                                     கொஞ்சம் வீட்டைக் கண்டுபிடிக்க சிரமப்பட்டார்கள்.உடனே இவங்களை அனுப்பி ம்ம்ம் ஒருவழியாக வந்து சேர்ந்தார்கள் துளசி மேடமும் கோபால் அவர்களும்.அப்புறமென்ன?முதல் முதலில் பார்க்கிறோம் என்னும் உணர்வேயில்லாத சந்திப்பு! ரொம்பப் பழகியவர்கள் போல் அவர்களும் நாங்களும் குழந்தைகளும் ஒட்டிக் கொண்டோம். ஒருமணி நேரம் போனதே தெரியவில்லை. ஒரே கலகல!கொஞ்சம் நேரத்துக்கு யாரோ உறவினர்கள் வந்துவிட்டுப் போன உணர்வு.இது என்ன உணர்வு?எப்படி இப்படி ஒரு ஒட்டுதல்?எப்பிடி இது சாத்தியம்?என்று நிறைய கேள்விகள். ஒரு வலைப்பூவில் எழுதுவது இப்படியெல்லாம் நட்புகளையும் உறவுகளையும் ஏற்படுத்தும் என்பது ஒரு இனிமையான உணர்வைத் தந்தது.ம்ம்ம்.... இனி நியுசீலாந்தில் எனக்கு ஒரு சொந்தம் இருக்குன்னு சொல்லிக் கொள்ளலாம்!

Thursday, March 31, 2011

ராஜஸ்தான் திவஸ் கொண்டாட்டங்கள்!

                        மார்ச் 28 முதல் 30 வரை ராஜஸ்தான் திவஸ் இங்கே ராஜஸ்தான் முழுக்கக் கொண்டாடப்படுகிறது. 28ம் தேதி குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி ஃபில்ம் ஷோ, கொஞ்சம் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றது.அதில் கலந்து கொள்ள என் பெண்ணையும் அழைத்துச் சென்றிருந்தேன்.ஏதோ நம்ம பங்களிப்பு கொண்டாட்டத்தில்!













ஏதோ முக்கியமான விபரம் எனத் தெரிகிறது.ஆனால் புரியவில்லை.அங்கிருப்பவர்களிடம் கேட்டும் சரியான விடை கிடைக்கவில்லை!

குழந்தைகளை மகிழ்விக்க மாறுவேடத்தில் கலைஞர்கள்!


 மொத்தத்தில் மற்றுமொரு குழந்தைகள் தினம்!

Tuesday, March 22, 2011

எவ்வ்ளோ புரிஞ்சிருக்கீங்க மேம்?

முதல் நாள் அம்மா வலுக்கட்டாயமா அழ அழ என்னை விட்டுட்டுப் போன உடனே உங்க கையைத்தானே மேம் பிடிச்சுக்கிட்டேன். அதை எப்போதும் பிடிச்சுட்டேயிருக்கணும்னு ஆசையாதான் இருந்துச்சு. ஆனா நீங்க உடனே என் கையை விட்டுட்டு உங்க நோட்புக்கை எடுத்து வச்சுட்டு ஏதோ எழுதப் போனீங்களே டீச்சர் அன்னியிலிருந்து உங்கமேல ஒரே கோபமா வந்துச்சு டீச்சர். முதல் நாள் டாய்லெட் போன போது ஆயாம்மா கோபமா ட்ரெஸ் கழற்றி விட்டதனாலே எனக்கு ஆயாம்மா பிடிக்கவே பிடிக்காது.

என்னிக்காவது நாங்க சொல்ற மாதிரி எங்களை விளையாட விட்டுருக்கீங்களா? எப்பவும் நீங்க நினைக்கிற, சொல்லுற விளையாட்டைத்தானே விளையாடச் சொல்றீங்க... எனக்கு என்னிஷ்டம் போல விளையாடணும்னு ஆசைஆசையா இருக்கும். அப்புறம் எனக்கு ரவிகிட்டேயும்,மலர் பக்கத்திலேயும்தான் உக்கார்ந்துக்கணும்னு ஆசை... நீங்க க்ளாஸ்லே வந்தவுடனே ரொம்ப பேசறீங்கன்னு எங்களை ஆளுக்கொரு மூலைக்கா உக்கார வச்சுருவீங்க.. எனக்கு அழுகை அழுகையா வரும். அப்புறம் எனக்கு அவசரமா டாய்லெட் போணும்னாலும் உடனே அனுப்பமாட்டீங்க...அப்பவும் எனக்கு அழுகை அழுகையா வரும

ஸ்கூலுக்கு வந்தவுடன் அம்மா நினைப்பா வரும்....உடனே பிஸ்கெட் சப்பிடணும்னு இருக்கும். அதான் முடியாதே பெல் அடிச்சப்புறம்தான் லன்ச் பாக்ஸ் திறக்கணும்னு சொல்வீங்க. தண்ணி குடிக்கணும்னா எல்லாரும் லைன்லே போய்தான் குடிக்கணும்.கலரடிக்கணும்னு இருக்கும் போது எழுதச் சொல்வீங்க. எழுதணும்னு இருக்கும் போது விளையாடச் சொல்வீங்க.விளையாடணும்னு இருக்கும் போது ஓரல்ஸ் சொல்லச் சொல்வீங்க.

ஆர்ட் ஆக்டிவிடி நான் நல்லா பண்ணமாட்டேங்கிறேன்னு நீங்களே பண்ணி நோட்டில ஒட்டிர்றீங்க......எனக்கு அதை நானே செய்யணும்னு ஆசையா இருக்கும். நான் அழுதா உடனே சுவர் பக்கம் திரும்பி நிக்கச் சொல்லி பனிஷ் பண்ணுறீங்க. நீங்க பக்கத்து க்ளாஸ் மேம் கிட்டே நீங்க சிரிச்சு சிரிச்சு பேசுறது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது மேம்.

A for appleனுதான் சொல்லணுமா ?A for Air னு சொல்லக்கூடாதா? எனக்கு எப்பதான் மழை வரும்னு இருக்கும் கப்பல் செய்து விளையாடாலாம்னு இருக்கும்.நீங்க Rain Rain go away பாடச் சொல்வீங்க

உங்க மேஜை கிட்டே வந்து நின்னு உங்ககிட்டே பேசிட்டேயிருக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கும் மேம். நீங்கதான் உடனேயே "go to your place" அப்படீன்னு சொல்லிருவீங்களே. சொன்னவுடனே கேட்கணும் உங்களுக்கு .இல்லைன்னா நீங்க கோபமாக் கத்திருவீங்க. அது எனக்கு ரொம்ப பயம். நீங்க கோபமாயிருக்கும் போது நாங்கல்லாம் கப்சிப்னு இருந்துடுவோம்....இல்லாட்டி அடி விழுந்துருமே...

உங்களைப் பற்றி இந்த ஒரு வருஷத்துலே இவ்வ்ளோ புரிஞ்சு வச்சிருக்கேனே நீங்க என்னைப் பற்றி எவ்வ்ளோ புரிஞ்சிருக்கீங்க மேம்?

Monday, March 14, 2011

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!-10

மூடித் திறந்த பூ இதழ்களிருந்து
விடுதலையாகியது
தேனீ

தீப்பெட்டிக்குள் ஒளிந்து கொண்ட
கூட்டுப் புழு உயிர்த்தெழுந்தது
வண்ணத்துப் பூச்சியாய்

நிழல் தேடி ஒடுங்கிக் கொண்ட
இடம் விட்டு மரத்தினடியில்
ஒடுங்கியது நாய்

மத்தியானத்துக்கு மட்டும்
சுகமாகத் தூங்க அடுப்பங்கரையில்
இடம் மாறியது பூனை..

சில மாதம் மட்டும்
இந்தியாவிலிருந்து சைபீரியாவுக்குப்
பறந்து கொண்டிருந்தன
சில பறவைகள்...

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!