நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, November 23, 2012

மழையே நலமா?


ஜன்னல் கம்பிகள் குளித்து நாளாச்சு!
குருவி ஈரஇறகில் சிடுக்கெடுக்க மறந்தாயிற்று
உன்னைச் சுமந்த குடைகள் மூலையில் முடங்கிக் கிடக்கிறது...
கை விரித்துக் குளிக்கும் மரம் கடுப்பாகிக் கொண்டிருக்கிறது..

உன்னை ஏந்த நீட்டிய கரங்கள் காலியாக.....
உன்னுடன் குடிக்கும் தேனீர் நேரங்கள் ரத்து செய்யப்பட்டன...
நீ விழுந்து பரப்பும் மண்வாசனை மறந்தது மண்....
உன் சொட்டு பட்டுத் தெறிக்காத முற்றம்  

கன்னத்தில் ஒன்றும் கைவிரலில் ஒன்றுமாக
ஒற்றைத்துளியாவது கொட்டிப்போ மழையே...
நான் நலமே என்று ஒரு வரி சொல்லிப்போ மழையே....
அது போதும் எனக்குக் கொஞ்சம் கவிதையெழுத....



Sunday, October 14, 2012

கடவுளின் ஞாபகம் வருகிறது....

கையில் காசு இல்லாமல்
கடந்து செல்லும் பெரும் செலவு
மருத்துவர் அறையில் காத்திருக்கும் நொடி 
இயல்பாகக் கடவுளை ஞாபகப் படுத்துகிறது.....

கூடிப் பிரியும் நட்பு நிரந்தரமாக் விலகிப் 
போகும் நிராகரிப்பின் போதும்
தனிமை கழுத்தை நெறிக்கும் போதும்
எப்போதும் கடவுள் ஞாபகம் வருகிறது....

சுனாமி, பூகம்பம், நில அதிர்வு
தீவிரவாதம்,குண்டு வெடிப்பு, விபத்து
இவையெல்லாம் வெறுமே உச்சரிக்கும் போது கூட
கடவுள் ஞாபகம் வருகிறது....

தன்னைக் குறித்த அயர்ச்சியும்
வாழ்வைக் குறித்த அச்சமும்
கொஞ்சமாய் எட்டிப் பார்க்கும் போது
கடவுளின் ஞாபகம் வருகிறது....

இயல்பாக வாழும்
இனிமையான காலங்களிலும்
வெள்ளிக்கிழமைகளில் கூட
எண்ணெய்க் கிண்ணத்துடன் சுற்றும் போதும்
கோவிலின் சூடம் ஒத்தும் போதும் கூட
என்னை நினைப்பதில்லையென
வருந்திக் கொண்டிருந்தார் கடவுள்.....

Thursday, July 26, 2012

"மம்மிகோ போன் கர்லோ"!!!

                             அவள் சின்ன ரோஜாப் பூப்பந்து போல இருந்தாள். கூட வந்த  அவங்க ரெண்டு பேரையும் பார்த்தால் அவளின் அப்பாம்மா போலத் தெரியவில்லை.கொஞ்சம் வயதானவர்கள் போலத் தெரிந்தார்கள். மகளா எனக் கேட்டாலும், பேத்தியா எனக் கேட்டாலும் தப்பாகிவிடுமோ என்று இவள்? எனக் கேள்விக் குறியுடன் நிறுத்திக் கொண்டேன்
                        எங்க பொண்ணுதான் என்றவாறு உட்கார்ந்து கொண்டார்கள்.12 வருடம் கழித்துப் பிறந்தாள் என்று எடுத்த எடுப்பிலேயே என் சந்தேகங்களுக்கு விடை கொடுத்து விட்டார்கள்.கொஞ்சம் செல்லமா பொத்திப் பொத்தி வளர்த்துட்டோம்.அவளை விட்டுட்டுப் போக மனசேயில்லை....அதனால் இப்படி ஒரு ஓரமா அவ க்ளாஸ் ஜன்னல் பக்கமா உட்கார்ந்து அவ அழுகையை நிறுத்தியதும் போகட்டுமா? என்று கேட்டார்கள். கொஞ்சம் பாவமாகத்தானிருந்தது....ஆனாலும் அப்படி அனுமதிக்க முடியாதே என்று "இல்லையில்லை நீங்க கிளம்புங்க இங்க அவளை ரொம்ப நல்லா பார்த்துக்குவோம்னு அவர்களை அவளிடமிருந்து பிரித்தெடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
           பொண்ணு கதறிக் கதறி அழுதாள் இவர்கள் கதறாமல் அழுதார்கள் என்பதுதான் வித்தியாசம்.
           வேலை நடுவில் மறந்துவிட்டேன்.நினைவு வந்ததும் அந்தக் குழந்தை அழுகையை நிறுத்திவிட்டதா என cctv காமெரா மூலமாகப் பார்த்தால் பிங்க் நிற ரோஜா இப்போது சிவப்பு நிறமாகி விட்டிருந்தாள் அழுது அழுது....அச்சச்சோ என்று உடனே ஆயாம்மாவை அனுப்பி அழைத்து வந்தால் ஒரே கத்தல். சாக்லேட்,பொம்மை எதுக்கும் அடங்க மாட்டேங்கிறது என்று தகவல்.முதல் வேலையாக போனை எடுத்து அவங்க அம்மாவிடம் பேசுவது போல
"அச்சா ஆப் ஆரஹே ஹோ....பூஜா கோ ஆகே கர் லே ஜானா....ஜீ ஹான் வோ சுப் பைட்டி ஹை" ("ஓ நீங்க வரீங்களா...பூஜாவை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க.இப்போ அவ அழாமலிருக்கா")அப்படீன்னதும் சத்தம் மூச் இல்லாமல் அழுகை நின்றது.
        என் முன்னால் நாற்காலியில் உட்கார்ந்து விட்டாள். பத்து நிமிடத்துக்கு ஒரு முறை "மம்மிகோ போன் கர்லோ  மம்மிகோ போன் கர்லோ" என்பதுவும் நான் பொய்யாய் போன் போடுவதும் தொடர்ந்தது.
இது முதல் நாள்தானே என்று பார்த்தால் தினமும் "மம்மிகோ போன் கர்லோ மம்மிகோ போன் கர்லோ" என்று என்னை எங்கே பார்த்தாலும் "மம்மிகோ போன் கர்லோ மம்மிகோ போன் கர்லோ" என்று ஒரே அழுகை. இது முதல் வாரம்......முதல் மாதம் என்று தொடர்ந்தது.
                   அன்று ஊஞ்சலில் இருந்து விழுந்து நெற்றியில் காயப்படுத்திக் கொண்டாள். ரத்தத்துடன் வந்ததும் கொஞ்சம் பதறி
"இஸ்கா மம்மிகோ போன் கர்லோ" ( அவங்க அம்மாவும்மு போன் போடுங்க) என்றதும்
          "இஸ்பார் சச்சிமே போன் கர்லோ" ( இந்த தடவை நிஜமாலுமே போன் பண்ணுங்க) என்று பூஜா அழுகையினூடே சொன்னதும் கொஞ்சம் அதிர்ந்தும் அசந்தும் போய் நின்றேன். குட்டீஸ்கள்தான் எவ்வ்ளோ சமர்த்தா இருக்காங்கன்னு இன்னும் யோசித்துக் கொண்டே.............ம்ம்ம் நான்தான்!!!!!

Tuesday, June 26, 2012

முன்பு போலில்லை எதுவும்.......

 தொலை பேசியிலும், ஈ- மெயிலிலும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்!!!

முன்பு போலில்லை எதுவும்.......

சோத்துத் தட்டு நாலு மூன்றாகியது....
காபிக் கோப்பைகள் பழைய ஞாபகத்தில்
நான்கில் நிரப்பப் பட்டு மூன்றாகிறது...
தோசையும் சப்பாத்தியும் சுடும் பொழுது
எண்ணிக்கையில் உன்னையும்
இன்னமும் சேர்த்துக் கொண்டிருக்கிறது......

உன் பொருட்களை நகர்த்தி வைக்கமுடியாமல்
ஒட்டிக் கொண்டிருக்கின்றன உன் நினைவுகள்
வீடு முழுக்க நிறைந்திருக்கும் உன் வாசனைச்
சிறையிலுருந்து விடுவித்துக் கொள்ளத் தெரியாமல்
விரும்பி அடைபட்டுக் கிடக்கிறோம்....

அழைக்கும் மணியோசைக்கும்
மினுக்கும் உன் முகத்திற்குமாய்
சில மைல்களுக்கப்பாலிருந்தபடி
தொலைபேசியைப் பார்த்துக் காத்திருப்பது
வழக்கமில்லாத வழக்கமாகி விட்டது....

தாரை வார்த்துக் கொடுத்ததும் தண்ணீராய்
உன்னைக் கொடுக்கத்தானா இவையத்தனையும்
என கண்ணில் கட்டிக் கொண்ட நீருடன் 
பிரியங்கள் இத்தனை நாளில்லாத அவசரத்துடன் 
உன்னை இறுக்கமாகப் பற்றிக் கொண்டது அன்று.....

எதற்காக இது அத்தனையும் என்னும் கேள்வியும்
நாமாகவே இழுத்துப்போட்டுக்கொள்கிறவைதானே 
இவை என்ற எண்ணமும்
பெண்ணைப் பெற்ற அனைவரிடமும் எப்போதாவது  
தோன்றியிருக்கலாம்.....என்ற எண்ண விதைகளுடன் 
உன் அம்மா........

Thursday, March 8, 2012

நான் வளர்கிறேனே மம்மீ!!!

மகளிர் தினம்.....என் மகளின் தினம்......ஹோலி மூன்றும் ஒன்றாக இந்த முறை......இன்று அவளின் பிறந்த நாள். எப்பவும் போல் இந்த முறையும் பரீட்சை நேரம்...No Celebration!
எப்போதும் பரீட்சை டைம் டேபில் வந்ததிலிருந்து அழுது கலங்கடிக்கும் வைஷ்ணவி இல்லை இந்த முறை.....................அதிலே ரொம்ப வருத்தம் இருந்தாலும் இந்த தடவை நல்ல புரிதல்.................That's fine with me mummy.....We'll have the fun after Exams என்று அவளாகவே புரிந்து கொண்டதில் எனக்குக் கொஞ்சம் ஆச்சர்யமும் ஏன் கொஞ்சம் ஏமாற்றமும் கூட.......???!!!
                       கைப் பிடித்துக் கூட்டிப் போகும் போது கையை உதறி ஓடும் போது எப்படி  ஓடப் படித்து விட்டாளே என்று சந்தோஷமும் என்னை விட்டு ஓடுகிறாளே என ஒரு வருத்தமும் இருக்குமோ  அதுவேதான் இப்போதும்.....
           அதெப்படிக் குழந்தைகள் ஒவ்வொரு கட்டத்திலும் படித்துக் கொள்ளும் விஷயங்களை இயல்பாக அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று பெரிய மனுஷியாக நான் வளர்கிறேனே மம்மீ!!!  என நகர்ந்து விடுகிறார்களோ .... தெரியவில்லை......அம்மாக்கள் மட்டும் எப்போதும் அடுத்த கட்டத்துக்கு நகரும் குழந்தைகள் கூடவே நகராமல் குழந்தையைப் பெற்றெடுத்த முதல்நாளிலேயே அம்மாக்களாகவே நின்றுவிடுகிறார்கள்...........
நினைப்பதெல்லாம் நிறைவேற இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வைஷ்ணவி!!!

Thursday, February 23, 2012

கண்ணாடி ஜன்னல்களை எனக்குப் பிடிப்பதில்லை

                      மூடிக் கிடக்கும் கதவு தட்டப்படும் போதெல்லாம் யாரோ  வந்து ஏதோ ஒரு உற்சாகத் தகவல் சொல்லப் போகிறார்கள் என்னும் எண்ணமும், உறங்கிக் கிடக்கும் தொலை பேசி பாடல் பாடி அழைக்கும் போது யாரோ ஒரு முகம் தெரியா உறவு ஒரு சந்தோஷத்தில் ஆழ்த்தும் தகவல் சொல்லும் என்று காத்துக் கிடக்கும் மனமும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.உறைக்குள் உறங்கிக் கிடக்கும் கடிதமொன்றைப் பிரிப்பதில் இருக்கும் அவசரம் அதனுள் இருக்கும் ஒரு முன்பே தெரிந்திராத ஒரு விஷயத்துக்காக......அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும்  அழகாக வண்ணக் காகிதங்களால் சுற்றப் பட்ட பரிசுப் பொருள் பிரிக்கப் படும் படபடப்பு அதனுள் இருக்கும் பரிசுக்காகத்தானே.....இதுவரை சுற்றப் பட்ட வண்ணக் காகிதங்களைத் தாறுமாறாகக் கிழிக்காமல் ஒழுங்காக ஒருமுறை கூடக் கிழித்ததில்லை.
                              மூடிக் கிடக்கும் ஜன்னல்கள் அடக்கி வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் கூட இந்த வகைதான்.மெயில் பாக்ஸ் திறக்கும் போதும் பாஸ் வேர்ட் டைப் பண்ணும் போதும் புது மெயில் கொண்டு வந்து தரும் செய்திகளுக்காக ஏங்கித்தான் கிடந்து போகிறது மனம். மொட்டவிழாத மலர்,மூடி திறக்காத சிப்பி, தளிர்க்காத செடி,முளை விடாத விதைகூட இப்படி வாழ்வின் ஒவ்வொரு படியிலும் ஆச்சர்யங்கள்.
                              கடல் முன்னால் தாகத்தோடு நிற்கும் உணர்வும் கடலுக்குள் எதையோ தேடி ஓடவேண்டும் என்ற எண்ணமும் கூடத் தவிர்க்க முடியாததாகிப் போகிறது. நீள் சாலையில் தன்னந்தனியாக ரப் ரப்பென்று சத்தமெழுப்பியபடி ஓடும் மனம் என் கண்ணில் எனக்கே தெரிகிறது....இது கொஞ்சம் அதிகம்தான்.ஆனால் எனக்கு நடக்கிறதே....
தபால் கார்டுகளும்
கண்ணாடி ஜன்னல்களும்
எனக்குப் பிடிப்பதில்லை
தகவல்களை எனக்கு
முன்கூட்டியே சொல்லிவிடுவதால்...
தெரியாதவைகளுக்கும்
தெரிந்தவைகளுக்குமிடையே
ஒரு சமன்பாட்டைப்
போட்டுக் கொண்டு
இயல்பாக இருக்க
முடிந்தவர்கள்
அசாதரணர்கள்......
நான் பாவம்
சாதாரணமானவளாய்
இருந்துவிட்டுப் போகிறேன்....

தேடல்களும் ஓட்டமும்தான் இயக்கிக் கொண்டிருக்கும் சக்தி.வண்டியோட்டும் போதும் கூட என்னை முந்திச் செல்லும் வண்டிகளும் நான் முந்திச் செல்லும் வண்டிகளும் கூட என் ஓட்டத்துக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுத்துக் கொன்டிருக்கின்றன.......

Saturday, January 14, 2012

இன்று பறவைக்குப் பின்னால் போனது மனம்.....

அங்கே பொங்கல்...இங்கே சங்க்ராந்தி!
ம்ம்...பட்டம் வங்கியாச்சு...மாஞ்சாவும் ரெடி.விடிந்தவுடன் அலறும் ஸ்டீரியோ தட்டு தட்டாய்த் தின்பன்டங்கள் ஒருவீடு இல்லாமல் அத்தனை பேரும் மொட்டை மாடியில் ஒரு நாள் முழுவதும் பட்டம்....விடுவதும்...அறுபடுவதுமாய்....அறுபட்டவுடன் "ஓ காட்டியோ" என்ற அலறலும்.....சில வீடுகளில் மைக்கில் "நீலப் பட்டம் வெள்ளைப் பட்டத்தை அறுக்கப் போகிறது....இதோ நீலப் பட்டம் சிக்கலுக்குள்ளாகிறது...இதோ...ஆஹா...அறுந்தேவிட்டது நீலப் பட்டம்.."என்று ரன்னிங்க் கமென்ட்ரி கூட உண்டு.இது ஒரு புது வகையான பொங்கல்தான்.
              
                வீட்டினுள் பொங்கல் வைத்துப் பூஜை செய்தும் பொங்கல் கொண்டாடிவிட்டு மொட்டை மாடியில் பட்டம் விட்டுச் சங்க்ராந்தி கொண்டாடுவதாகவுமே பொங்கல் பல வருடங்களாக மாறிவிட்டிருக்கிறது..
          
                  முற்றம் நிறைக்க கோலம் போட்டு,வெளியில் பனியில் வெண்பொங்கலும்,சர்க்கரைப் பொங்கலுமாகப் பொங்க வைத்து குலவையென்ற பேரில் கூப்பாடு போட்டு,கரும்பு கடித்துத் துப்பி,பனங்கிழங்கு உடைத்து ம்ம்ம் எவ்வ்ளோ நாளாச்சு இப்படிப் பொங்கல் கொண்டாடி....
              
                நீர் நிலம் எல்லாம் எனக்கேயென எடுத்துக் கொண்டாலும் இன்னும் திருப்தியில்லாமல் இன்று வான்வெளி முழுவதையும் எனக்கே என எடுத்துக் கொண்டு பறவைகளைப் பயப்படுத்துகிறான் மனிதன்.இந்த வாரத்தில் மட்டும் நூற்றுக் கணக்கான அடிபட்ட பறவைகளையும் இறந்து போன பறவைகளையும் கணக்குக் காட்டுகிறது செய்தித் தாள்.பள்ளிகளில் பிரார்த்தனையின் போது காலை 9 மணிக்கு மேலும் சாயங்காலம் 4 மணிக்குள்ளும்தான் பட்டம் விடவேண்டும் என்றும் அறிவுரை சொல்லப்படுகிறது ஆனாலும் விடியும் முன்னே பட்டம் என்னவோ பறக்க ஆரம்பித்து விடுகிறது.
                 
                வீட்டுக் கூண்டுக் கிளிகளின் மேலும் நாய்க்குட்டிகளின் மீதும் வைக்கும் பாசம் பொதுவாக பறவைகளின் மீது இல்லாமல்தான் போய்விடுகிறது.இங்கே ஜெய்ப்பூரில் அடிபட்டு விழும் பறவைகளை உடன் எடுத்து சிகிச்சை அளிக்க என்றே ஒரு இளைஞர் குழு ஊர் முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பது கொஞ்சம் ஆறுதல்.
               
                      ஊரில் ஏதாவது கலவரம் என்றாலோ,சூரிய கிரஹணம் என்றாலோ பிள்ளைகளிடம் இன்று வெளியே போகவேண்டாம் என்று சொல்வதைப் போலப் பறவைகளும் தன் குஞ்சுகளுக்கும் சொல்லிப் பத்திரப்படுத்துமா?கொஞ்சம் பறவைகளுக்காய் இன்று மனம் பதறுகிறது.கூட்டை விட்டு வெளியில் வராமலிருந்தால் தப்பித்து விடும்..அப்புறம் அதுகளுக்கு இன்றைக்குச் சாப்பாடு.???
                         
                     கம்பு கம்பாய் இணைக்கிற கயறுகள் குருவிகள் ஊஞ்சலாடாமல் தனியே ஆடிக் கொண்டிருந்தது.வீட்டு ஜன்னல்களின் ஓரம் வைக்கப் பட்ட தண்ணீர் குடிக்காமல் தளும்பியிருந்தது.தூவப்பட்ட அரிசி கேட்பாரற்றுக் கிடந்தன்...மொட்டை மாடி நிறைக்க மனிதர்கள்...மனிதர்கள்...வீடு நிறைய வருவோரும்..போவோரும்...
                  
                       மனது மட்டும் தண்ணீர் நிரம்பிய வாளிக்குள் முங்க முடியாமல் கிடக்கும் ப்ளாஸ்டிக் மக் போல பறவைக்குப் பின்னால்.......விரித்து வைத்த செய்தித்தாளின் மேல்  சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று விழுந்து கிடந்தது......ம்ம்ம்....காயம் பட்டு வீழ்ந்த பறவையோடதா??????....உயிர் பிரிந்து வீழ்ந்த பறவையோடதா????கவலையாயிருந்தது.