வளைகாப்புக்கு எடுத்த ஃபோட்டோ ரோலை அவங்க பேன்ட்லே வச்சுட்டு அப்பிடியே தண்ணிக்குள்ளெ தோய்க்கப் போட்டா என்ன ஆகும்?அது ஒரு தடவை...
திடீர்னு நைனிதால் போய் ஒரு வாரம் இருக்க வந்த வாய்ப்பு.எல்லாம் ரெடி.லீவே கொடுக்காத பள்ளியிலிருந்து லீவும் கிடைச்சாச்சு.வீட்டுக்குப் பொய் வண்டியில் ஏறவேண்டியதுதான் பாக்கி........படியிறங்கும் போது வழுக்கி விழுந்து மண்டை உடைந்து ஆஸ்பத்திரி...அது இதுன்னு...ம்ம்ம்...
புது வீட்டு பால்காய்ப்பு விழாவை வளைச்சு வளைச்சு ஃபோட்டோ எடுத்துட்டு ஸ்டூடியோலே போய் உள்ளே ரோலே இல்லைன்னு தெரிஞ்சா எப்பிடி இருக்கும்?இது இன்னொரு தடவை...
அப்படி ஒரு ராசி நம்ம ராசி!
வலைச்சர ஆசிரியரா இருக்கும் போது சீனா சார் வலைச்சர வலைப்பூவுக்குள் நுழைய முடியாத படி ஏகக் குழப்பம்....அப்புறம் ஒரு வாரத்துக்கு தினமும் தொடர்ந்து மின்சாரத்தடை.அதையும் மீறி எப்பிடியோ ஒரு வாரத்தை ஓட்டியாச்சு.
திரட்டி நட்சத்திரமா இருந்தப்போ பி.எஸ்.என்.எல் சதி செய்து இணையம் படுத்துக் கொண்டது.இன்டெர்னெட் கஃபே போய் ஒருவழியாக முடித்துக் கொண்டாயிற்று.
இப்போ சரி நட்சத்திரமாகப் போறோமேன்னு கொஞ்சம் அழகு படுத்தலாமேன்னு டெம்ப்ளேட் மாற்றி விட்டுப் பெருமையாப் பார்த்தா.....தமிழ்மண ஓட்டுப் பட்டையைக் காணோம்.இண்ட்லி ஓட்டுப் பட்டையையும்தான்........ம்ம் ஒருவழியா எல்லாத்தையும் திரும்பிக் கண்டுபபிடிச்சு வெட்டி ஒட்டி, வெச்சுட்டு இருக்கற அழகே போதும்னு முடிவு செய்தாச்சு...ம்ம் இனி நான் ரெடி ...நீங்க ரெடியா??
வாய்ப்பை அளித்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி!
பிரியம் சுமக்கும் உயிர்கள்
பயணப்பட்டுக் கொண்டிருக்கும் பாதையில் அவ்வப்போது மனதை நெகிழ்த்தும் நிகழ்வுகளும்,இப்படியான உலகத்திலேயா இருக்கிறோம் என்னும் எண்ணத்தை வரவழைக்கும் நிகழ்வுகளும் நிக்ழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.அவற்றையும் கண்டும் காணாமல் சில நேரமும்,கண்ணில் நீருடன் சிலநேரமும் கடந்து கொண்டுதான் இருக்கிறோம்.இது கண்ணில் நீருடன் கடந்து சென்ற ஒரு நிகழ்வு.
குழந்தைகளிடம் இரக்க குணத்தை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் அனாதை ஆசிரமம் அல்லது முதியோர் இல்லம் இப்படி அழைத்துச் செல்வது வழக்கம்.அங்கு செல்லும் நாளுக்கு முன்னதாகவே குழந்தைகளிடம் அவர்களுக்குக் கொடுக்க் அவர்களால் முடிந்ததைக் கொண்டு வரவும் (சோப்,பிஸ்கெட்,இனிப்பு) சொல்லி எடுத்துக் கொண்டு செல்வதும் வழக்கம்.
அங்கு முதியோர்களிடம் த்னித்தனியாகக் குழந்தைகளைப் பழகச் சொல்லிப் பேசிக் கொண்டிருந்து சில ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை வழங்கி அவர்களை சந்தோஷப்படுத்துவது வழக்கம்.சிலநேரங்களில் குழந்தைகள் அவர்களின் பெயர் வாங்கி வந்து தீபாவளி, வருட பிறப்பு அன்று வாழ்த்து அட்டை அனுப்பவும் செய்வார்கள்.
ஒன்பது, பத்தாவது வகுப்புக் குழந்தைகளே அங்கே ஒரு அசாதரணமான அமைதியுடன் இருப்பார்கள்.அவர்கள் அந்த முதியவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்கிறார்கள் என்பதை உணரவைக்கும் மௌனமாக அது இருக்கும்.மற்றபடியான் பிக்னிக்,சுற்றுலா எல்லாம் மாணவர்களுடன் நான் செல்வதில்லையென்றாலும் இந்த நிகழ்வுக்கு நான் கூடச் செல்வது வழக்கம்.கண்ணில் நிற்காமல் வழியும் நீருடனும்,கிழிந்த சட்டையுடனும்,சுருங்கிய தோலுடனும்,தலை நிறைய பனி பொழிந்தது போன்ற வெண்முடியுடனும்,பற்கள் கொட்டிப் போன பொக்கை வாயுடனும் விதம் விதமாக பெரியவர்கள்.
இருந்தாலும் எல்லோரின் கண்ணிலும் அணைபுரண்டு பெருக்கெடுத்தோடும் பிரியம் மட்டும் நிறைந்து இருக்கும்.கொடுப்பது ஒரு சோப்பென்றாலும் அதைக் குழந்தைகளிடமிருந்து பெற்றுக் கொள்வதில்தான் எவ்வளவு ஆனந்தம்.உடனே பிரியம் தெரிவிக்கும் ஒரு உச்சி முகர்தல்.கைகளோடு கைகளைச் சேர்த்துக் கொள்ளும் போது தொற்றிக் கொள்ளும் பிரியம் சுமக்கும் ஒரு வெம்மை.
எப்போதும் அது ஒரு மறக்கமுடியாத அனுபவமாகத்தான் இருந்து விடுவதுண்டு.ராகுல் பத்தாவது வகுப்பு மாணவன்.முதியோரில்லத்தை விட்டு வெளி வந்தவுடன் என்னிடம் அவசரமாக வந்து ஒரு சின்ன காகிதத்தைக் கொடுத்தான்.அதில் நடுங்கும் விரல்களால் எழுதிய ஒரு செல் நம்பர்."மேம் அவர் இந்த நம்பரை யாருக்கும் தெரியாமல் கொடுத்து "இது என் மகனோட நம்பர்.இந்த நம்பருக்கு ஒரே ஒரு தடவை ஃபோன் செய்து "உங்க அப்பா சாரி சொல்லச் சொன்னார்.அவர் இங்கே சந்தோஷமாயில்லேன்னு சொல்லச் சொன்னார்" அப்படீன்னான்.
நான் கொஞ்சம் அதிர்ச்சியாகவும்,வருத்தமாகவும் கொஞ்சம் குழம்பிய நிலையிலும் இருந்தேன்.சரி என்று வாங்கி வைத்து விட்டு வேலைகளை முடித்து விட்டு பலமுறை யோசித்து விட்டு அந்த நம்பருக்கு ஃபோன் செய்தேன்.
எடுத்தவுடன்....."உங்க அப்பா இருக்கும் முதியோரில்லத்தில் உங்க அப்பாவைப் பார்த்தேன்..."இவ்வ்ளோதான் சொன்னேன்.உடனே கட் செய்யப்பட்டது.மீண்டும் மீண்டும் ஃபோன் செய்யும் போதும் கட் செய்யப்பட்டது.பின்னர் எடுக்கப்படவேயில்லை.
மரம், செடி, கொடி மாதிரி அவ்வப்போது உதிர்த்தும் துளிர்த்தும் கடக்கிறது வாழ்வு.