
ஐந்தரை மணிக்கு வேலைக்காரி...
ஆறு மணிக்குப் பால்காரன்...
ஆறரைக்குக் காய்கறி....
ஏழு மணிக்குக் குக்கர்...
எட்டு மணிக்கு வண்டியில்...
எட்டரைக்கு ஆஃபீஸ்..பத்து மணிக்கு டீ....
பன்னிரண்டு மணிக்கு லன்ச்...
மூணு மணிக்கு காப்பி...
ஐந்து மணி...வண்டியில்...
அப்புறம் அதே வரிசையில் குக்கர்...
சாப்பாடு..பத்திரிக்கை .....தூக்கம்...
கழுத்து நெறிபடுவது போலிருந்தது...அவளுக்கு...
மூச்சு விடுவதே சிரமமாக இருந்தது...
கொஞ்ச நாளாகவே இந்த மாதிரிதான் அவஸ்தையாய் இருந்தது....
இப்படி நேரத்துக்குள் மாட்டிக் கொண்டு முழிப்பது பிடிக்கவில்லை....
கொஞ்சம் ஆனந்தமாக மணித்துளிகளை ரசிக்க வேண்டும் போலிருந்தது...எப்படித் தப்பிப்பது....?இந்த ஓட்டத்திலிருந்து விடுதலை வேண்டும்....சில நாட்களுக்காவது.....நாட்கள்???
சரி...சரி..ஒரு நாளைக்காவது.....ஒன்றுமே செய்யாமல்...ஆமாம் எதுவுமே செய்யாமல்...கடிகாரம் பார்க்காமல்
எப்படி? எப்படி?இவங்களும் பிள்ளைகளும் இருந்தால் இதெப்படிச் சாத்தியமாகும்???
கொஞ்சம் குற்ற உணர்ச்சியாகவே இருந்தது...இப்படி நினைப்பதற்கு....ஆனாலும் தேவைப் பட்டது......அந்த விடுதலை...
நல்லவேளையாக இவங்க தூரத்துச் சொந்தத்தில் ஒரு கல்யாணம்..எல்லோரையும் அனுப்பி வைத்தாயிற்று....உடம்பு சரியில்லையென்று லீவு போட்டாயிற்று....ஒரு முழுப் பகல் கிடைக்கலாம்.......கதவை மூடி விட்டு வந்து படுத்தாள்..சுவர்க் கடிகாரம் மணி எட்டானதைச் சங்கீதமெழுப்பிச் சொன்னது..
மெல்ல எழுந்து எல்லாக் கடிகாரங்களையும் நிறுத்தி வைத்தாள்.....ரொம்ப நாளைக்கப்புறம் டி.வி ரிமோட் கையில்.....ஏதோ சேனலில் ...நேரம் எட்டு...இன்றைய செய்திகள்....என்று ஒரு பெண் சிரித்தாள்...மீண்டும் நேரம்...படக்கென்று பட்டனை அணைத்தாள்........
யார் வீட்டிலோ எஃப்.எம் ரேடியோ நேரம் இப்பொழுது...என்று அலறியது...காதைத் தலையணையில் அழுந்தப் பதித்து மற்றொரு தலையணையால் இன்னொரு காதையும் மூடிக் கொண்டாள்.
நாம் எப்போதிருந்து இப்படி ஆனோம்???ஏனிப்படி???? என யோசிக்க ஆரம்பித்தாள்......
அந்தத் திறந்த பரந்த வெளியில் அலையலையாக மக்கள் கூட்டம் தங்கள் வீட்டுக் கடிகாரங்களைக் கொண்டு வந்து ஒரு பெரிய குழியில் குவித்துக் கொண்டிருந்தார்கள்.அவளுக்குப் பெருமையாக இருந்தது...."அவள் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து இப்படி ஒரு சட்டமா என்று..."
" இனிமேல் கடிகாரமே இருக்காது யாரும் நேரத்தின் பின்னால் பேயாக அலைந்து நிகழ்காலத்தைத் தொலைக்க மாட்டார்கள்." ஓட்டமாக ஓடி வாழ்வை வினாடிகளில் தொலைக்க மாட்டார்கள்...
நிதானமாக நிலா பார்ப்பார்கள் .....நட்சத்திரம் எண்ணுவார்கள்....மழைத் தண்ணி கையில் பிடித்து விசிறுவார்கள்..இன்னும் நிறைய....
கிணி..கிணியென்ற சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தாள்...அட செல் போன் ...
"ஹல்லோ"
என்னம்மா இவ்வ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு இருந்தே??? இந்த நேரத்துலேயா தூங்கறது...? பதினொன்றரை மணிக்குத்தானே முகூர்த்தம்னு நினைச்சோம்....பத்தரை மணிக்கே முகூர்த்தம்...பஸ்காரன் வேற பத்து மணிக்கே கொண்டு வந்துட்டான்....வொர்க்கிங் டேங்கறதனாலே எல்லாரும் பதினொரு மணிக்கெல்லாம் கிளம்புறாங்க...நானும் பதினொன்றரை மணிக்கெல்லாம் கிளம்புறேன்...ஒரு ரெண்டுமணி போல வந்தாச்சுன்னா கொஞ்ச நேரம் ஆஃபீஸ் போயிட்டு வந்துடலாம்...அரை நாள் லீவை மிச்சப் படுத்திடலாம் OK வா? என்று பதிலுக்குக் காத்திராமல் வைத்தான்...
அத்தனை கடிகாரங்களின் முட்களும் இவள் தலையைப் பார்த்துக் குறிவைத்துப் பாய்ந்து வந்து கொண்டிருந்தன.......