
ஒரு நாளின் நடுநிசியில் தொடர்பு எல்லைகளுக்கு அப்பால் தூக்கியெறியப் படப் போகிறான் அவன்.....மரணம் அவனைக் காதலிக்கத் தொடங்கி விட்டது....இந்த விஷயம் தெரிந்த மறுநிமிடம் உடலும் மனமும் பர பரத்தது.அவன் உயிர் அதன் கூட்டுக்குள் சிறகை விரித்துச் சோம்பல் முறித்துக் கொண்டது.
இத்தனை நாள் வாழ்ந்த நாட்குறிப்பைத் திருப்பிப் பார்த்துக் கொண்டான்.குறிப்பிட்டுச் சொல்லும்படியான மைல்கற்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை.சேகரித்த நட்புக்களும் உறவுகளும் எண்ணிக்கையில் ரொம்பவும் குறைவாகவே இருந்தது.பணக் கற்றைகள் அதனினும் குறைவாகவே இருந்தது.
இனி? அவனுக்கான மணித்துளிகள் இவை எவற்றைப் பற்றியும் கவலைப் படாமல் கரைந்து கொண்டே இருந்தன... 30 வருடங்களை இப்படி ஒன்றுமேயில்லாமலா கரைத்துவிட்டேன் என்று அவன் மனம் குற்றம் சாட்டியது...திடீரென்று முதல் வகுப்பு டீச்சர்,எப்பவும் சண்டை போடும் அருள்மதி,அழகாகச் சிரித்துப் பேசும் ஹெலென்,நண்பர்கள் கூட்டமாக நனைந்த மழை,12-ம் வகுப்பு பிரிவு விழா,முதல் இன்டர்வியு, முதல் காதல் இப்படியாக வாழ்வின் எல்லா முதலும் நினைவுக்கு வர..... இரண்டாவது எதுவுமே நினைவுகளின் விளிம்புகளில் எப்படி ஒன்றுமில்லாமல் கரைந்து போயின?இப்படி சம்பந்தமில்லாமல் மனம் தாவிக் கொண்டேயிருந்தது......
மனம்...... உடனடியாகச் சுவடுகளைப் பூமியில் பதிக்க குறுகிய காலத் திட்டம் போட்டது. முதல் வேலை மனம் சேகரிப்பா? பணம் சேகரிப்பா?உறைந்திருந்த உயிர் திடீரென்று விழித்துக் கொண்டது.
அதுவா? இதுவா?எல்லாமேவா?
நாளை முதலில் எதைச் செய்வது?
அப்பா அம்மாவைப் பார்த்து எத்தனை நாளாகிறது? ஒரு நடை ஊருக்குப் போய் விட்டு வரவேண்டும் .....என் கண்ணே....உன்னைத் தூக்கி முத்தமிட்டு எத்தனை நாளாகிறது?எங்கே என் மகன்??? கண்விழிக்கட்டும் உன்னைக் கன்னத்தோடு உரசி இறுக்கிக் கொள்கிறேன்....வாழ்க்கைத் துணை .....சரண்யா...உன்னைப் பெயர் சொல்லி அழைத்துத்தான் எத்தனை நாளாகிறது??? நாளை பார்....உன்மேல் அன்பு மழை கொட்டப் போகிறேன்....என நினைத்துக் கொண்டான்
சில மணித்துளிகளுக்கான இந்த இரவல் உயிரைக் காலன் திருப்பிக் கேட்டுக் காவல் காக்கிறானே????ஏன் எல்லோரும் தூங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்??? காலத்தின் அருமை புரியவில்லையா?...உங்கள் தூக்கத்தினால் கொஞ்சமே கொஞ்சம் மிஞ்சியிருக்கும் என் மணித்துளிகள் விரயமாகிறதே????எனக் கவலைப் பட்டான்.
இந்த சுவாசம் இன்றே கடைசியோ??ஏன் இப்படி மூச்சு வாங்குகிறது?கண்கள் ஏன் இப்படிக் கொட்டுகின்றன? கடவுளே இன்னும் ஒரே ஒரு நாள் கொடு...தொலைத்த நொடிகளையெல்லாம் அந்த ஒரு நாளில் வாழ்ந்து முடித்துவிடுகிறேன்.....என வேண்டிக் கொண்டான்....அந்த மௌனத்தின் இருட்டுக்குள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பிரக்ஞை கூட இல்லாமல் வீழ்ந்து கிடந்தான்.....
யார்மேலும் ஒரு தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி இன்னும் ஒரே ஒரு நாள் அதிகம் கொடுக்காத கடவுளிடம் மட்டும் கோபித்துக் கொண்டே அந்த உயிர்ப் பறவை தன் சிறகுகளை உதிர்த்துவிட்டு தன் மரணக் குறிப்புகளைப் பிரதியெடுக்கக் கூட நேரமில்லாமல் நட்சத்திரக் கூட்டங்களை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது......
இன்னும் ஒரே ஒரு நாள் இவனுக்குக் கொடுத்திருந்தால் தன் சுவடுகளை அழுத்தமாகப் பூமியில் பதித்திருப்பானோ எனக் கடவுள் யோசிக்க ஆரம்பித்திருந்தார்....
நம்மிடம் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன இந்த பூமியில் சுவடுகளைப் பதிப்பதற்கு????நான் யோசிக்க ஆரம்பித்தேன்....