
சுடும் சூரியனாய்த்தான் இரேன்....
மாலையானால் மறையத்தான் வேண்டும்
பின் எங்கேயிருந்து வந்தது
நான் ஒருவனே என்ற திமிர்?
பச்சையாய் மரத்துடன் ஒட்டிக்
கொண்டிருக்கும் இலைக்குத் தெரியாது...
காய்ந்தவுடன் சருகாகி உதிர
வேண்டியதுதான் என்று...
பின் எங்கேயிருந்து வந்தது
அந்தத் திமிர்?
மின்னிச் சிணுங்கும் நட்சத்திரங்களுக்கு
என்ன தெரியும்? விடிந்தால்
காணாமல் போய்விடுவோமென்று?
வெறும் இரவு வாழ்க்கைக்கே இந்தச்
சிமிட்டலா?
எங்கேயிருந்து வந்தது
அந்தத் திமிர்?
எல்லோருக்கும் பிடித்த மழையாய்
இருந்தென்ன பலன்...
வீழ்ந்தால்தான் நீ மழை....
பின் எங்கேயிருந்து வந்தது
அந்தத் திமிர்?
எல்லா பறவைகளின்
சிறகுகளுக்குள்ளும் கூரிய நகங்கள்
ஒளிந்து கொண்டு இருப்பது போல்....
எல்லா மனங்களுக்குள்ளும்
இந்தத் திமிர் சிக்கிக்
கொண்டுதான் இருக்கிறது....
மனதைத் திறந்து வைப்போம்...
திமிரைத் திணறடிக்கும்
அன்பினால் விரட்டுவோம்...
அதிரடி வேக வாழ்க்கையில்
திமிரையும் அன்பையும் ஒன்று சேர
பத்திரப் படுத்துவது..........
சில நேரங்களில் மௌனங்களைச்
சுமக்கும் கண்ணீராய் கஷ்டப் படுத்துகிறது......
மண்தரையும் மலர்களும்
சேரக் கூடாதா என்ன?
அதுபோல் திமிரும் அன்பும்
இணைந்திருந்தால்தான் என்ன?