
சிட்டுக் குருவியின் வாலில் வாழ்க்கை...
சிட்டுக் குருவியின் வாலில்
வாழ்க்கையைக் கட்டி விட்டு
வேடிக்கை பார்த்தேன்......
மேலே...கிழே.....
அங்கும்..... இங்கும்....
சிறகை விரித்துப் பறந்தது...
சமையலறையும்...சமையலும் இல்லை.
பணத்துக்காக ஓடும் வேலை இல்லை
தினசரிக் குளியல்,செய்தித் தாள்
படிக்கும் வேலை இல்லை...
டி.வி பார்க்கும் கால அட்டவணை இல்லை
பள்ளிக் கூடம், வீட்டுப் பாடம்
பரீட்சை, ரிசல்ட் டென்ஷன் இல்லை....
நீயா.... நானா ...சண்டை இல்லை..
ஓடிக் கொண்டே இருக்கும் அவசரம் இல்லை.
சுதந்திரம்...............விடுதலை...
சுதந்திரக் காற்றே மூச்சு......
பிறந்தால் பறக்கும் குருவியாக....
சிறகடிக்கும் சிட்டுக் குருவியாக....
பிறந்து பறக்க வேண்டும்...
எண்ணங்கள் சிறகடிக்க.....
மின்விசிறியைச் சுழல விட
....
அடடா.... ஒரு நிமிடத்தில் அதில்
சிக்கிச் சிறகொடிந்து மரித்தது..
அந்தச் சிட்டுக் குருவி
என் வாழ்க்கையுடன்....