நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, April 29, 2009

சேகரித்த அன்பு = செலவழித்த அன்பு

மேகம்
உள்வாங்கிச் சேகரித்த நீரும்
செலவழித்த சில்லறை மழையும்

கடல்
கொண்டு சேர்க்கும் அலையும்
திருப்பி எடுத்துப் போகும் அலையும்

பேசிச் சேகரித்த நேரமும்
சண்டையில் தொலைத்த நேரமும்

தூங்கிச் சேகரித்த கனவுகளும்
தூங்காமல் தொலைத்த இரவுகளும்

சிரித்துச் சேகரித்த நட்புகளும்
அழுது தொலைத்த உறவுகளும்

மனம்
அள்ளிச் சேகரித்த அன்பும்
துள்ளிச் செலவழித்த அன்பும்

கடந்து போன பகல்களும்
கரைந்து போன இரவுகளும்

போல் எப்போதும்
சமன்பாடு சரியாகுவதில்லை!!

ஆனாலும்
எப்போதும் போல் மீண்டும்
செலவழிக்கவும் சேகரிக்கவும்
தயாராகினேன்......

இது யூத்ஃபுல் விகடனில்.....

Monday, April 20, 2009

அன்னிக்கு ஒருநாள் எறும்புக்கு இறுதி மரியாதை செஞ்சோமில்லே!!!


அப்போ நான் ஜெய்ப்ப்பூருக்கு புதிது...நேரம் போகலையேன்னு கம்ப்யூட்டர் க்ளாஸில் சேர்ந்தேன்.... நானும் மற்றுமொரு பொண்ணும்தான்....மற்றபடி 20 பசங்க....முதல் நாள் ரொம்ப நல்ல பிள்ளைகளாத்தான் இருந்தாங்க.....ரெண்டாவது நாள் வித்தையைக் காட்டீட்டாங்கல்லே!!!!

ஒரு கடுத்துவா எறும்பை (சிவப்புக் கலர்லே இருக்குமே) உயிரோட கொண்டு வரச் சொன்னாங்க... கம்ப்யூட்டர் க்ளாஸ் ராகிங்!!! அச்சச்சோ கடிக்குமே!!! அந்தப் பொண்ணு பயந்து போய் சுட்டி (லீவ்) எடுத்துக்கிட்டாள்.....நம்ம அவ்வ்ளோ ஈஸியா பயப்பட்டிருவோமா?? தைரியமா வந்தா ஒரே கத்தல்...

சரின்னு தோட்டத்துக்குப் போய்...தேடோ தேடோன்னு தேடினா...வாட்ச்மேன் வந்து என்னம்மா எதுனா தொலைச்சுட்டீங்களா மேடம்? அப்படீன்னார்...சரி ஏதுக்கும் இருக்கட்டும்னு ஆமாப்பா ஒரு வைர மோதிரம் தொலைச்சுட்டேன்னு சொன்னேன்...அவனும் சேர்ந்து தேட ஆரம்பிச்சுட்டான் ....அது மட்டுமில்லாமே வ்ரவங்க போறவங்களையெல்லாம் தன்னோட மிஷன்லெ சேர்த்துக்கிட்டான்.

ஒருவழியா அதைப் பார்த்துட்டேன்....ஆஆஆ!!!!!! கிடைச்சுருச்சுன்னு அலறினேன்...எங்கே??? எங்கேன்னு எல்லோரும் ஓடி வர...சட்னு ஒரு டகால்டி வேலை பண்ணி மறைத்துக் கொண்டேன்.....ஒரு இலையில் மறைத்து எடுத்துட்டுப் போனா பசங்க "இது வேலைக்காவாது....எறும்பு மண்டையைப் போட்டுருச்சு"ன்னு ஒரே இம்சை...

எத்தனை தடவைதான் எறும்பைத் தேடுவது வாட்ச்மேன் கூட " போங்கம்மா எத்தனை தடவை மோதிரத்தைத் தொலைப்பீங்கன்னு அலுத்துக் கொண்டான்!!!

ஒரு ரெண்டு மூணு தடவை இப்படியே எறும்பைச் சாகடிச்சப்புறம் ப்ளீஸ்பா என்னை விட்டுருங்கன்னு சொன்னா பசங்க அத்தனை செத்த எறும்பையும் கையில் கொடுத்து "Do the final rites and then you are free" அப்படீன்னுட்டாங்க....

அப்புறம் என்னா பண்றதுன்னு தெரியாம எறும்புகளைக் கையில் வாங்கினா....ஜெய்ப்பூர் வழக்கப்படி "ராம் நாம் சத்ய ஹை" அப்படீன்னு சொல்லிக்கிட்டே போய் தோட்டத்துலே குழி வெட்டி எறும்புகளைப் புதைத்து பூவெல்லாம் வைக்கணும்னு சொல்லிட்டாங்க....ம்ம்ம்.....எல்லாத்தையும் செஞ்சு..... சாமி கும்பிட்டப்புறம்தான் விட்டாங்க பாசக்காரப் பசங்க!!!

Friday, April 10, 2009

அஹம் சாத்தானாஸ்மி!!!



நான் எனும் அகம்பாவம் தலைக்கேற கண்மண் தெரியாமல் நடந்து கொள்ளும் போது நான்...
அஹம் சாத்தானாஸ்மி!!!

என் ப்ரொஃபெஷனைப் பற்றி யாராவது தப்பாப் பேசினால் என்ன ஏதுன்னு கேட்பதற்கு முன்னால் கோபத்தில் கொதிக்கும் போது நான்......
அஹம் சாத்தானாஸ்மி!!!

நான் வேலை பார்க்குமிடத்தில் யாரையாவது எம்.டி புகழ்ந்து பேசினால் உடனே பொறாமையில் துடிக்கும் போது நான்...
அஹம் சாத்தானாஸ்மி!!!

எனக்கு மிகவும் பிரியமானவர்களிடம் வேறு யாராவது ஒட்டி உறவாடுவது பிடிக்காமல் தவிக்கும் போது நான் .....
அஹம் சாத்தானாஸ்மி!!!

சுறு சுறுவென்று கோபம் தலைக்கேறும்போது என்ன செய்கிறேன் என்று தெரியாமல்
கத்தும் போது நான்...
அஹம் சாத்தானாஸ்மி!!!

தப்புச் செய்தவங்களை மன்னிக்க முடியாமல் திணறும்போது நான்
அஹம் சாத்தானாஸ்மி!!!

தப்பு என்று தெரிந்தும் சில விஷயங்களை மீண்டும் மீண்டும் செய்ய முனையும் போது நான்
அஹம் சாத்தானாஸ்மி!!!

இதுவரைக்கும் எந்த சமயத்திலும் எந்த உயிருக்கும் தீங்கு மனதாலும் நினைக்காத நான்
அஹம் பிரம்மாஸ்மி!!!


நான் சாத்தானிடம் கேட்டேன்
நான் நல்லவளா? கெட்டவளா?

நான் கடவுளிடமும் கேட்டேன்
நான் நல்லவளா? கெட்டவளா?

கடவுளும் சாத்தானும் சந்தித்து
ஒருவரையொருவர் கேட்டது....
இவள் நல்லவளா? கெட்டவளா??

டிஸ்கி :
அஹம் பிரம்மாஸ்மி-- நான் கடவுள்
அஹம் சாத்தானாஸ்மி--நான் சாத்தான்
சரிதானே???

தமிழ்மணம் என்னைப் பார்த்துக் காப்பி அடித்ததா??????




தமிழ்மணம் என்னப் பார்த்துக் காப்பி அடித்ததா???? நான் தமிழ்மணத்தைப் பார்த்துக் காப்பி அடித்தேனா???? அச்சச்சோ சும்மாங்க......தமிழ்மணம் ப்ளீஸ் கோவிச்சுக்காதீங்க!!!!!!

Tuesday, April 7, 2009

கடிகார முட்களிடம் சிக்கிக் கொள்ளாமல்.............ஒருநாள்....


ஐந்தரை மணிக்கு வேலைக்காரி...
ஆறு மணிக்குப் பால்காரன்...
ஆறரைக்குக் காய்கறி....
ஏழு மணிக்குக் குக்கர்...
எட்டு மணிக்கு வண்டியில்...
எட்டரைக்கு ஆஃபீஸ்..பத்து மணிக்கு டீ....
பன்னிரண்டு மணிக்கு லன்ச்...
மூணு மணிக்கு காப்பி...
ஐந்து மணி...வண்டியில்...
அப்புறம் அதே வரிசையில் குக்கர்...
சாப்பாடு..பத்திரிக்கை .....தூக்கம்...
கழுத்து நெறிபடுவது போலிருந்தது...அவளுக்கு...

மூச்சு விடுவதே சிரமமாக இருந்தது...
கொஞ்ச நாளாகவே இந்த மாதிரிதான் அவஸ்தையாய் இருந்தது....
இப்படி நேரத்துக்குள் மாட்டிக் கொண்டு முழிப்பது பிடிக்கவில்லை....

கொஞ்சம் ஆனந்தமாக மணித்துளிகளை ரசிக்க வேண்டும் போலிருந்தது...எப்படித் தப்பிப்பது....?இந்த ஓட்டத்திலிருந்து விடுதலை வேண்டும்....சில நாட்களுக்காவது.....நாட்கள்???

சரி...சரி..ஒரு நாளைக்காவது.....ஒன்றுமே செய்யாமல்...ஆமாம் எதுவுமே செய்யாமல்...கடிகாரம் பார்க்காமல்

எப்படி? எப்படி?இவங்களும் பிள்ளைகளும் இருந்தால் இதெப்படிச் சாத்தியமாகும்???
கொஞ்சம் குற்ற உணர்ச்சியாகவே இருந்தது...இப்படி நினைப்பதற்கு....ஆனாலும் தேவைப் பட்டது......அந்த விடுதலை...

நல்லவேளையாக இவங்க தூரத்துச் சொந்தத்தில் ஒரு கல்யாணம்..எல்லோரையும் அனுப்பி வைத்தாயிற்று....உடம்பு சரியில்லையென்று லீவு போட்டாயிற்று....ஒரு முழுப் பகல் கிடைக்கலாம்.......கதவை மூடி விட்டு வந்து படுத்தாள்..சுவர்க் கடிகாரம் மணி எட்டானதைச் சங்கீதமெழுப்பிச் சொன்னது..

மெல்ல எழுந்து எல்லாக் கடிகாரங்களையும் நிறுத்தி வைத்தாள்.....ரொம்ப நாளைக்கப்புறம் டி.வி ரிமோட் கையில்.....ஏதோ சேனலில் ...நேரம் எட்டு...இன்றைய செய்திகள்....என்று ஒரு பெண் சிரித்தாள்...மீண்டும் நேரம்...படக்கென்று பட்டனை அணைத்தாள்........

யார் வீட்டிலோ எஃப்.எம் ரேடியோ நேரம் இப்பொழுது...என்று அலறியது...காதைத் தலையணையில் அழுந்தப் பதித்து மற்றொரு தலையணையால் இன்னொரு காதையும் மூடிக் கொண்டாள்.

நாம் எப்போதிருந்து இப்படி ஆனோம்???ஏனிப்படி???? என யோசிக்க ஆரம்பித்தாள்......

அந்தத் திறந்த பரந்த வெளியில் அலையலையாக மக்கள் கூட்டம் தங்கள் வீட்டுக் கடிகாரங்களைக் கொண்டு வந்து ஒரு பெரிய குழியில் குவித்துக் கொண்டிருந்தார்கள்.அவளுக்குப் பெருமையாக இருந்தது...."அவள் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து இப்படி ஒரு சட்டமா என்று..."

" இனிமேல் கடிகாரமே இருக்காது யாரும் நேரத்தின் பின்னால் பேயாக அலைந்து நிகழ்காலத்தைத் தொலைக்க மாட்டார்கள்." ஓட்டமாக ஓடி வாழ்வை வினாடிகளில் தொலைக்க மாட்டார்கள்...

நிதானமாக நிலா பார்ப்பார்கள் .....நட்சத்திரம் எண்ணுவார்கள்....மழைத் தண்ணி கையில் பிடித்து விசிறுவார்கள்..இன்னும் நிறைய....

கிணி..கிணியென்ற சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தாள்...அட செல் போன் ...

"ஹல்லோ"

என்னம்மா இவ்வ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு இருந்தே??? இந்த நேரத்துலேயா தூங்கறது...? பதினொன்றரை மணிக்குத்தானே முகூர்த்தம்னு நினைச்சோம்....பத்தரை மணிக்கே முகூர்த்தம்...பஸ்காரன் வேற பத்து மணிக்கே கொண்டு வந்துட்டான்....வொர்க்கிங் டேங்கறதனாலே எல்லாரும் பதினொரு மணிக்கெல்லாம் கிளம்புறாங்க...நானும் பதினொன்றரை மணிக்கெல்லாம் கிளம்புறேன்...ஒரு ரெண்டுமணி போல வந்தாச்சுன்னா கொஞ்ச நேரம் ஆஃபீஸ் போயிட்டு வந்துடலாம்...அரை நாள் லீவை மிச்சப் படுத்திடலாம் OK வா? என்று பதிலுக்குக் காத்திராமல் வைத்தான்...

அத்தனை கடிகாரங்களின் முட்களும் இவள் தலையைப் பார்த்துக் குறிவைத்துப் பாய்ந்து வந்து கொண்டிருந்தன.......